குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு:ஏரிகளில் மண் அள்ளுவதில் விதிமீறல்கோர்ட்டில் வழக்கு தொடரபோவதாக அறிவிப்பு
ஏரிகளில் வீதிகளை மீறி மண் அள்ளப்படுவதாக அதிகாரிகளிடம் விவசாயிகள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிடில் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
பட்டா மாற்றம் கேட்டு விண்ணப்பித்த மனுக்களுக்கு பல மாதங்கள் ஆகியும் தீர்வு காணப்படாமல் விவசாயிகளை அலைக்கழிப்பு செய்கிறார்கள். எனவே உடனுக்குடன் பட்டா மாற்றம் செய்துதர வேண்டும். இயற்கை விவசாயம் பற்றி கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஏரிகளில் விதிமீறல்
கூட்டேரிப்பட்டில் பாலம் அமைக்கும் பணிக்காக அங்குள்ள சாலை ஏரியில் முறைகேடாக மண் எடுக்கிறார்கள். அதேபோல் பெலாக்குப்பம் சிப்காட் பணிக்கும் முறைகேடாக ஏரிகளில் இருந்து மண் எடுக்கின்றனர். ஏரி மதகுக்கும் அங்கு எடுத்திருக்கிற மண்ணுக்கும் 10 அடி பள்ளமாக இருக்கிறது. இதனால் மதகு வழியாக தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.
இதற்கு இன்றைக்கு எங்களுக்கு முடிவு தெரிய வேண்டும் என்றுகூறி அதிகாரிகளிடம் விவசாயிகள் காரசாரமான விவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் மேலும் கூறியதாவது:-
உழவன் செயலி
உழவன் செயலி சரியான முறையில் செயல்படுவதில்லை. அவை சரியாக செயல்படுகிறதா என்று அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் அன்றாட நிலவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். அதுபோல் வேளாண் சார்ந்த திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் அதில் பதிவுசெய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்கு ரூ.45 வரை பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பணப்பட்டுவாடா
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளைபொருளுக்கு உரிய பணம் பட்டுவாடா செய்ய தாமதம் செய்கின்றனர். ஏரிகளில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களால் நீரின் தன்மை வீணாகிறது. எனவே அந்த கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் சி.பழனி, கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, வேளாண் இணை இயக்குனர் கணேசன், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.