ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் வன்முறை: தி.மு.க., நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்


ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் வன்முறை: தி.மு.க., நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்
x

ஈரோடு தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், கல்வீச்சில் 2 தரப்பினருக்கும் மண்டை உடைந்தது, போலீசாரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க பல்வேறு வீதிகள் வழியாக சென்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மண்டை உடைப்பு

இதற்காக அவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் அருகே காவிரி ரோடு பகுதியில் சீமான் வந்த வழித்தடத்தில், அவருக்கு முன்பாக கட்சியினரின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது அங்கு தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நாம்தமிழர் கட்சியினரை பார்த்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்கள். அதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினரும் கோஷம் எழுப்பினார்கள். வாகனங்களில் சென்றவர்கள் அங்கேயே இறங்கி, நின்று கொண்டிருந்த தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் 2 தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தாக்கியதில் தி.மு.க. தொண்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் கையில் வைத்திருந்த கட்சிக்கொடி கட்டி இருந்த இரும்பு குழாய்களை வைத்து சரமாரியாக தாக்கத்தொடங்கினார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் கட்சிக்கொடி கட்டி இருந்த கம்பி குழாய்களை எடுத்து வீசினார்கள். இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் மண்டை உடைக்கப்பட்டு காயம் அடைந்தனர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரின் கண்ணாடியும் கல்வீசி உடைக்கப்பட்டது. இந்த திடீர் கலவரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மீதும் தாக்குதல்

இதுபற்றி தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அதிரடியாக தாக்கிக்கொண்ட 2 தரப்பினரும் சமாதானம் செய்ய வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். போலீசார் அதிகம் பேர் குவிந்ததால் சற்று தாக்குதல் குறைந்தாலும் வாக்குவாதம் தொடர்ந்தது.

இந்த வாக்குவாதம் மீண்டும் மோதல் ஏற்படும் வாய்ப்பு வந்தது.

திறந்த ஜீப்பில்...

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே சீமான், வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து கொண்டே வந்தனர்.

பின்னர் கலவரம் செய்பவர்களை போலீசார் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியபடி பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு சென்றனர்.

கலைந்து சென்றனர்

இதற்கிடையே தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அத்துடன் துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இந்த கலவரத்தில் மண்டை உடைக்கப்பட்டவர்களை போலீசார் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அதுமட்டுமின்றி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சீமான் ஆறுதல்

பின்னர் அந்த பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் சீமான், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட கட்சியினரை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த திடீர் மோதலில் தி.மு.க. மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகமது யூனுஸ் (வயது 56) உள்பட 6 பேரும், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் உள்பட 5 பேரும், போலீஸ்காரர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த திடீர் கலவரம் ஈரோடு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story