விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரின் தம்பி கைது


விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரின் தம்பி கைது
x

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பாக விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரின் தம்பி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்


அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பாக விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரின் தம்பி கைது செய்யப்பட்டார்.

பணமோசடி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 59). இவர் மதுரை ஐகோா்ட்டு அரசு வக்கீலாக இருந்தவர்.

பஞ்சாயத்து தலைவர், யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் பொறுப்பு வகித்தவர். இவர், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரனின் தம்பி ஆவார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான ரவிச்சந்திரன், அவருடைய மனைவியும், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வள்ளி ஆகியோர் கடந்த 1.11.2017 முதல் 31.3.2018 வரை மதுரையை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி சத்யா, ஸ்ரீஜா, ஜெனிபர், சுகன்யா, கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட பல பேருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் வேலை பெற்று தருவதாக கூறி தனது சகோதரர் ரவிச்சந்திரன், வள்ளி ஆகியோரிடம் ரூ.83 லட்சம் கொடுத்ததாகவும், வேலை வாங்கித்தராததால் பணத்தை திரும்ப கேட்ட போது ரூ.15 லட்சத்தை மட்டும் கொடுத்ததாகவும், மீதம் ரூ.68 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே நல்லதம்பி புகார் அளித்தார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ரவிச்சந்திரன், வள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில், பணத்தை இழந்தவர்கள் போலீசாரிடம் கூறியபோது, நாங்கள் பணத்தை நல்லதம்பியிடம்தான் கொடுத்தோம் என தெரிவித்து இருந்தனராம்.

மேலும் கோட்டையூரை சோ்ந்த கிருஷ்ணவேணி என்பவர் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நல்லதம்பியிடம் ரூ.3½ லட்சம் கொடுத்ததாகவும், நல்லதம்பி வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும், மாவட்ட குற்றப்பிாிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து மேலும் சிலர், நல்லதம்பி அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிாிவு போலீசில் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று நல்லதம்பியை மதுரையில் திடீரென கைது செய்தனர். அவர் மீது வந்த மோசடி புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவா் பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்ததாகவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

நல்லதம்பி ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பணமோசடி புகார் அளித்திருந்தவர் ஆவார்.


Related Tags :
Next Story