மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு
தமிழக பள்ளிக்கல்வித்துறை தேர்வுகள் இயக்ககம் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகளை அறிவித்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 10,438 மாணவர்களும், 11,770 மாணவிகளும் ஆக மொத்தம் 22,208 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 9,987 மாணவர்களும், 11,615 மாணவிகளும் ஆக மொத்தம் 21,602 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 95.68. மாணவிகள் 98.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.27.
2-வது இடம்
விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதிர்பாராத வகையில் இம்மாவட்டம் 7-வது இடத்தை பெற்றது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் நடப்பாண்டில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.