முதல் முறையாக தமிழகம் வருகை -மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சாமி கும்பிட்டார் - கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்பு
மதுரை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். மாலையில் கோவை சென்ற அவர் ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக நேற்று தமிழகத்துக்கு வருகை தந்தார். இதற்காக தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர், பகல் 11.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். உடன் அவருடைய மகள் இதிஸ்ரீயும் வந்தார்.
பூரண கும்ப மரியாதை
விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் மனோதங்கராஜ், மதுரை கலெக்டர் அனீஸ்சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, 12.05 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தார். அங்கு அம்மன் சன்னதி அருகே அமைக்கப்பட்ட பசுமை அறைக்கு சென்ற அவர், சற்று நேரத்தில் கோவில் முன்பு வந்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு பிரகாரங்களில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அவரை கவர்னர், அவருடைய மனைவி லட்சுமி வரவேற்று அழைத்து சென்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் சார்பில் தக்கார் கருமுத்து கண்ணன், மலர் மாலை வழங்கினார். தொடர்ந்து மேளதாளத்துடன் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், கமிஷனர் முரளீதரன், போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க் ஆகியோர் ஜனாதிபதியை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
சாமி கும்பிட்டார்
கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை, ஜனாதிபதி கழுத்தில் அணிந்து கொண்டு நேராக மீனாட்சி அம்மன் சன்னதிக்கு சென்றார். அங்கு அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து தீபாராதனை நடந்தது. மகளுடன் ஜனாதிபதி, பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்திருந்த குங்குமம், ஏலக்காய் மாலை, இலையில் செய்த கிளி ஆகியவை எடுத்து வரப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
பின்னர் முக்குறுணி விநாயகர் சன்னதியில் தரிசனம் செய்து, நேராக சுந்தரேசுவரர் சன்னதிக்கு சென்றார். அங்கும் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி சன்னதி பிரகாரத்தை வலம் வந்து, உற்சவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்து, கொடிமரத்தையும் வணங்கினார்.
சிற்பங்களை பார்த்து வியந்தார்
கொடிமரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்தை சுற்றி பார்த்த ஜனாதிபதி அங்கு உள்ள சிற்பங்களை பார்த்து வியந்தார். அவரிடம் அந்த சிற்பங்களின் சிறப்புகளை முதன்மை செயலாளர் சந்திரமோகன் இந்தியில் விளக்கி கூறினார்.
கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு, சிறிய அளவிலான மீனாட்சி அம்மன் வெண்கலச் சிலை, பட்டுப்புடவை மற்றும் கோவிலை பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் போன்றவை வழங்கப்பட்டன. அவற்றை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி தனது வருகை குறித்து கோவில் பதிவேட்டில் ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டார்.
மகளுடன் புகைப்படம்
பின்னர் பொற்றாமரைக்குளம் முன்பு மகளுடன் ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் சிவராத்திரி அன்று மீனாட்சி, சுந்தரேசுவரரை தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.
சரியாக 12.50 மணிக்கு கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், அனைவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். காரில் அங்கிருந்து அரசு சுற்றுலா மாளிகையை நோக்கிச் சென்றார்.
மக்களை சந்தித்த ஜனாதிபதி
தெற்கு ஆவணி மூலவீதி, வெண்கலக்கடை சந்திப்பு பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் வந்தவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். உச்சி வெயிலில் காத்திருந்த மக்களை பார்த்த ஜனாதிபதி, திடீரென்று காரை நிறுத்துமாறு கூறினார்.
பின்னர் காரில் இருந்து அவர் கீழே இறங்கி வந்து பொதுமக்களை நோக்கி நடந்து சென்று அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். மக்களும் உற்சாகமாக அவரை வணங்கினார்கள். அப்போது வரிசையில் நின்ற சிறுமியோடு ஜனாதிபதி கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி மீண்டும் காரில் ஏறி சுற்றுலா மாளிகைக்கு சென்றார். மதிய உணவுக்கு பின், பிற்பகல் 2.05 மணிக்கு மதுரையில் இருந்து விமானத்தில் கோவை புறப்பட்டு சென்றார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், துணை கமிஷனர்கள் சாய்பிரனீத், அரவிந்த் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
ஜனாதிபதி தரிசனத்தையொட்டி, கிழக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதிகளில் பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அடையாள அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள், பட்டர்கள், அதிகாரிகள் மட்டுமே கோவிலுக்குள் இருந்தனர்.
ஜனாதிபதி வருகைக்கு முன்பாக காலை 10 மணி வரை தெற்கு மற்றும் மேற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, வடக்கு கோபுரம் வழியாக வெளியே வந்தனர்.
ஜனாதிபதி தரிசனம் செய்துவிட்டு சென்ற பின்னர், மதியம் 1 மணி அளவில் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு கருதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கோவில் சார்ந்த ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஈஷா யோகா மைய சிவராத்திரி விழா
மதுரையில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் 3.10 மணிக்கு வந்தார். அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி காரில் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை 5 மணிக்கு கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள சென்றார்.
அங்கு அவரை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். தொடர்ந்து ஈஷா யோகா மையத்தில் நடந்த 29-வது சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.
வழிபட்டார்
அங்குள்ள சூர்ய குண்டத்தில் தீபம் ஏற்றி வழிபட்டார். தொடர்ந்து நந்தி சிலைக்கும், லிங்க பைரவி தேவி சன்னதிக்கும் சென்று வழிபட்டார். அப்போது அவர் அங்குள்ள ஆலமரத்தில் பூ மாலை கட்டி வழிபாடு செய்தார்.
பிறகு தியான லிங்க சன்னதிக்கு சென்று தியானம் செய்தார். முன்னதாக சூர்ய குண்டத்தில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்த ஜனாதிபதியை பேட்டரி காரில் அமர வைத்து ஈஷா யோகா மைய பகுதிக்குள் ஜக்கி வாசுதேவ் அழைத்து சென்றார்.
அவர்கள் அனைவரும் ஆதியோகி முன்பு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடைக்கு வந்தனர். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். விழா மேடைக்கு வந்த ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் அங்கு வைக்கப்பட்டு இருந்த மகிழம் மரத்தை வழிபட்டதுடன், யோகேஸ்வர லிங்கத்தையும் வழிபட்டனர்.
இசை நிகழ்ச்சி
பின்னர் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமேகான், மற்றும் பல்வேறு இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை அங்கு கூடியிருந்த மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இன்று குன்னூர் செல்கிறார்
ஜனாதிபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார். அங்குள்ள போர் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து 11.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து மதியம் 12.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.