மூத்த வாக்காளர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கவுரவிப்பு
வேலூர் மாவட்டத்தில் மூத்த வாக்காளர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவர்களை கவுரவித்தார். நன்றி கடிதத்தையும் அவர்களிடம் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் மூத்த வாக்காளர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவர்களை கவுரவித்தார். நன்றி கடிதத்தையும் அவர்களிடம் வழங்கினார்.
சர்வதேச முதியோர் தினம்
சர்வதேச முதியோர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி 80 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்க வேண்டும் என என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர்களிடம் தேர்தல் ஆணையரால் வழங்கப்பட்ட நன்றி கடிதமும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் தொகுதி வாரியாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரம் வருமாறு:-
காட்பாடியில் 5,447 பேரும், வேலூரில் 3,884 பேரும், அணைக்கட்டில் 5,538 பேரும், கே.வி.குப்பத்தில் 5,331 பேரும், குடியாத்தத்தில் 5,267 பேர் என மொத்தம் 25,467 பேர் உள்ளனர். இதுதவிர 100 மற்றும் 100 வயதுக்கு மேல் காட்பாடியில் 46 பேரும், வேலூரில் 26 பேரும், அணைக்கட்டில் 47 பேரும், கே.வி.குப்பத்தில் 37 பேரும், குடியாத்தத்தில் 29 பேரும் என மொத்தம் 185 வாக்காளர்கள் உள்ளனர்.
நன்றி கடிதத்தை வழங்கினார்
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று வேலூர் அல்லாபுரத்தில் உள்ள மூத்த வாக்காளர்களை சந்தித்து கவுரவித்தார். மேலும் தேர்தல் ஆணையர் வழங்கிய நன்றி கடிதத்தினையும் வழங்கினார்.
அந்த கடிதத்தில், தேர்தலின் போது வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியதற்காகவும், இளம் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்கமளித்தற்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் துணை தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோரும் இந்த பணியை மேற்கொண்டனர். இந்த கவுரவிப்பு நிகழ்வு புகைப்படத்தினை அதிகாரிகள் தேர்தல் பிரிவு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.