விவேகானந்தர் மண்டபத்தை ஒரு மாதத்தில் 2 லட்சம் பேர் பார்த்தனர்
கன்னியாகுமரியில் சீசன் ‘களை’ கட்டிய நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரியில் சீசன் 'களை' கட்டிய நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
சுற்றுலா தலம்
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கன்னியாகுமரியில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரையில் திரண்டனர். கடந்த ஒரு வாரமாக மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியாமல் இருந்தது. ஆனால் நேற்று சூரிய உதயம் தெளிவாக ெதரிந்தது. அதை சுற்றுலா பயணிகள் மிகவும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
விவேகானந்தர் மண்டபம்
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர். இதற்காக அவர்கள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பார்த்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.