ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை


ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை
x

வேங்கைவயல் வழக்கு விசாரணையில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

புதுக்கோட்டை

வேங்கைவயல்

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்த இந்த சம்பவத்தில் முதலில் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதன்பின் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட 140-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டனர்.

டி.என்.ஏ. பரிசோதனை

இந்த நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் வேங்கைவயல், இறையூர் பகுதியை சோ்ந்தவர்கள் உள்பட 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர். அந்த 11 பேரிடம் விரைவில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டபோதே அந்த தொட்டியில் இருந்து நீர், அசுத்தம் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வின் அறிக்கையோடு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் நடத்தப்படும் டி.என்.ஏ. பரிசோதனையில் கிடைக்கும் அறிக்கை ஒப்பிடப்படும். இதில் ஏதேனும் பொருந்தி செல்கிறதா? அல்லது அசுத்தத்தை எடுத்து வந்து கலந்தார்களா? என்பது விசாரணையில் தெரியவரும்.

குரல் மாதிரி பரிசோதனை

இதற்கிடையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்துள்ள தகவலை வேங்கைவயல் பகுதியை சேர்ந்தவர்கள் வாட்ஸ்-அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜா முரளி உள்பட 2 பேர் ஆடியோவில் பகிர்ந்துள்ளனர். இதில் அந்த ஆடியோவில் உள்ள குரல், அவர்களுடையதுதானா? என பரிசோதிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேரின் குரலை பரிசோதனை செய்வதற்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு நேற்று அவர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களது குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

அறிக்கைக்கு பின் விசாரணை

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ``குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாட்ஸ்-அப்பில் ஆடியோவில் தகவல் பரப்பியது தொடர்பாக 2 பேரின் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த ஆடியோவில் உள்ள குரல் அவர்களுடையதுதானா? என பேச வைத்து உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த அறிக்கை வந்தபின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தை பரிசோதனை செய்ததில் ஆண், பெண்களுக்குரியது என அறியப்பட்டதாக எங்களுக்கு எந்தவித அறிக்கையும் வரவில்லை'' என்றார். குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தம் யாருடையது? அதனை கலந்தவர்கள் யார்? என்பதை அறிவியல் நுட்பரீதியாக நிரூபணம் செய்து குற்றவாளிகளை ஆதாரத்தோடு கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story