பட்டப்பகலில் பெண் அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு


பட்டப்பகலில் பெண் அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x

கலெக்டர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் அரசு பெண் அதிகாரியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு போடியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி (வயது 50) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று ராஜராஜேஸ்வரி தனது அலுவலக அறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். மதியம் 1.30 மணி அளவில் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் போடியை சேர்ந்த உமாசங்கர் (40) என்பவர் வந்து ராஜராஜேஸ்வரியை சந்தித்து பேசினார்.

சரமாரி அரிவாள் வெட்டு

அப்போது திடீரென உமாசங்கர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் ராஜராஜேஸ்வரியின் தலை, இடது கை, கன்னம் ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உமாசங்கரை பிடித்து அரிவாளை பறித்தனர். உடனடியாக ராஜராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த அல்லி நகரம் போலீசார் உமாசங்கரை கைது செய்தனர்.

காரணம் என்ன?

இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 2011-ம் ஆண்டு முதல் உமாசங்கர் பணியாற்றினார். 2015-ம் ஆண்டு உமாசங்கர் ஆவணங்களை முறையாக பராமரிக்காதது குறித்து அவருக்கு, ராஜராஜேஸ்வரி விளக்கம் கேட்டு 17'ஏ' நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்டத்துக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இருப்பினும் விளக்கம் கேட்டு அளித்த நோட்டீசுக்கு முறையான பதில் கொடுக்கவில்லை என்று கூறி 2019-ம் ஆண்டு உமாசங்கருக்கு துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 17'பி' நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பதவி உயர்வு பாதிக்கப்பட்டு மன உளைச்சல் அடைந்தார். இந்த விரோதம் காரணமாகவே அவர் ராஜராஜேஸ்வரியை வெட்டியது தெரியவந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story