வக்கீல்களுக்கு இடையே மாநில அளவில் நடந்த கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா ஐகோர்ட்டு நீதிபதி சவுந்தர் பங்கேற்பு


வக்கீல்களுக்கு இடையே மாநில அளவில் நடந்த கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா ஐகோர்ட்டு நீதிபதி சவுந்தர் பங்கேற்பு
x

நாகர்கோவிலில் வக்கீல்களுக்கு இடையே நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி சவுந்தர் பரிசு வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வக்கீல்களுக்கு இடையே நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி சவுந்தர் பரிசு வழங்கினார்.

கைப்பந்து போட்டி

நாகர்கோவில் வக்கீல் சங்க 111-வது ஆண்டு விழாவையொட்டி வக்கீல்களுக்கு இடையே மாநில அளவிலான கைப்பந்து போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 31 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில் திருநெல்வேலி வக்கீல் சங்க அணி முதல் பரிசும், தென்காசி வக்கீல் சங்க அணி 2-வது பரிசும், புதுச்சேரி வக்கீல் சங்க அணி 3-வது பரிசும், கடலூர் வக்கீல் சங்க அணி 4-வது பரிசும் பெற்றன.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வக்கீல் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தலைமை தாங்கினார். விழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதியும், குமரி மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான சவுந்தர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

புத்தகங்கள்

நாகர்கோவில் வக்கீல் சங்க 111-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன. இங்கு உள்ள நூலகத்தை நான் பார்த்தேன். 1910-ம் ஆண்டு காலத்தில் உள்ள புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. பழைய பல நூல்கள் கிழிந்தும் காணப்படுகிறது. இதனை பார்க்கும் போது இந்த நூலகத்தை இங்கு உள்ள வக்கீல்கள் நன்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் இல்லாத புத்தகங்கள் கூட இங்கு உள்ளன.

நாகர்கோவில் வக்கீல்கள் திறமையானவர்கள் என்பது எனக்கு தெரியும். இதை நான் சென்னையில் வக்கீலாக பணி புரிந்த போது அறிந்து கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story