முல்லைப்பெரியாற்றை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்


முல்லைப்பெரியாற்றை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
x

வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றை தன்னார்வலர்கள் சுத்தம் செய்தனர்.

தேனி

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடந்தது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா காலங்களில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. இதனால், வீரபாண்டியில் உள்ள முல்லைப்பெரியாற்றில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் காணப்பட்டன. இதையடுத்து தேனி மாவட்ட தன்னார்வலர் குழுவினர் இந்த ஆற்றுப் பகுதியில் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஆற்று பகுதியில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

பின்னர் தன்னார்வலர்கள் சேகரித்த குப்பைகள் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், "வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் 1½ டன் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி உள்ளோம். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த குப்பைகளை அகற்றாமல் இருந்தால் ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அவை அடித்து செல்லப்பட்டு கண்மாய்களையும், விவசாய நிலங்களையும் பாழ்படுத்தும் என்பதால் முன்கூட்டியே அவற்றை அகற்றிவிட்டோம். ஆற்றில் நீராடும் பக்தர்களும், தர்ப்பணம் செய்ய வருபவர்களும் பழைய ஆடைகளை நீரில் விட்டுச் செல்கின்றனர். அதை தடுக்க ஆற்றங்கரையோரம் துணிகளை போடுவதற்காக குப்பை தொட்டி கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் ஆறு மாசுபடுவதை தடுக்கலாம்" என்றனர்.


Next Story