சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ- மாணவிகள் வாந்தி-மயக்கம்:உணவு மாதிரிகள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைப்பு


சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ- மாணவிகள் வாந்தி-மயக்கம்:உணவு மாதிரிகள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைப்பு
x

அந்தியூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ- மாணவிகள் திடீர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததை தொடர்ந்து உணவு மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 129 மாணவ- மாணவிகள் திடீர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததை தொடர்ந்து உணவு மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நடுநிலைப்பள்ளி

அந்தியூர் அருகே உள்ள கரட்டூரில் அரசு நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 157 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 72 பேர் மாணவர்கள், 85 பேர் மாணவிகள்.

பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக விஜயலட்சுமி பணியாற்றி வருகிறார். மேலும் 4 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கூடத்தின் சத்துணவு சமையலராக கரட்டூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.

சத்துணவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. 132 மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தனர். பின்னர் மதியம் 12.40 மணி அளவில் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இந்த மாணவ- மாணவிகள் சாப்பிட்டு விட்டு சென்ற பிறகு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதியம் 1 மணி அளவில் சத்துணவு வழங்கப்பட்டது.

வாந்தி- மயக்கம்

அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி தீபிகா (வயது 13) என்பவருக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் இதுகுறித்து சமையலர் வள்ளியம்மாளிடம் தெரிவித்து உள்ளார். உடனே அவர், 'மாணவ- மாணவிகளிடம் சாப்பாட்டை யாரும் சாப்பிட வேண்டாம். கீழே கொட்டிவிடுங்கள்,' என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவ- மாணவிகள் சாப்பாட்டை கீழே கொட்டி விட்டு வகுப்புக்கு படிக்க சென்றுவிடுகின்றனர். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும், அனைத்து மாணவ- மாணவிகளும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தீபிகா, பாரதி ஆகியோர் திடீரென வீட்டில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

129 பேர்

இதேபோல் மாணவிகள் தாரணி, தர்ஷினி, இந்துமதி ஆகியோரும் திடீரென வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி விழுந்தனர். உடனே மாணவிகளை பெற்றோர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மாணவ- மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் அடைந்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 மாணவ- மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ெமாத்தம் 129 மாணவ- மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் என்பது அறிந்ததே.

பீதி அடைய வேண்டாம்

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவ- மாணவிகளில் பெரும்பாலானோர் நேற்று காலை உடல் நலம் குணமானதை தொடர்ந்து வீட்டுக்கு திரும்பினர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், 'மாணவ- மாணவிகள் அனைவரும் நன்றாக குணமாகிவிட்டனர். அனைத்து மாணவ- மாணவிகளின் ரத்த அழுத்தம், இதய துடிப்பு நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு வராத குழந்தைகளையும் வரவழைத்து அவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றையும் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிலருக்கு லேசான வயிற்று வலி மயக்கம் இருப்பதால் அவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 14 மாணவ- மாணவிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. எனவே யாரும் பீதி அடைய வேண்டாம்,' என்றனர்.

ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

மேலும் இதுபற்றி அந்தியூா் தாசில்தார் தாமோதரன், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசங்கரன், அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், 'மதிய சத்துணவு சமைத்த பின்னர் அதன் மாதிரிகளை எடுத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த உணவுகளை அவர்கள் உண்ட பின்னர் 30 நிமிடம் நேரம் கழித்து தான் மாணவ- மாணவிகளுக்கு உண்ண வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதி முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா?. அப்படி என்றால் அந்த உணவுகளை பள்ளிக்கூடத்தில் எந்த ஆசிரியர்கள் உண்டு பார்த்து உள்ளனர்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,' என்றார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவ- மாணவிகள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகள் அருந்திய குடிநீரின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னர் தான் உண்மையான காரணம் தெரியவரும்,' என்றனர்.


Next Story