மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி


மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி
x

புதுக்கோட்டையில் அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. இதில் 28 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

அங்கன்வாடி மையம்

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக பின்புறம் தெற்கு சந்தைப்பேட்டையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அதே பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். 6 வயது வரையிலான குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து ெசல்கின்றனா்.

இந்த நிலையில் நேற்று சுமார் 30 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு மதியம் 12.30 மணி அளவில் மதிய உணவாக கலவை சாதம் வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட பின் அனைத்து குழந்தைகளும் மதியம் 2 மணிக்கு மேல் வீட்டுக்கு திரும்பினர்.

வாந்தி

இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற குழந்தைகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. 3 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில குழந்தைகள் தங்களுக்கு காய்ச்சல் அடிப்பது போல இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் பதறிப் போனார்கள். குழந்தைகளை தூக்கிக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு திரண்டு வந்தனர்.

அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட உணவால் தான் ஒவ்வாமை ஏற்பட்டதுதெரியவந்தது. அங்குள்ள உணவில் பாசிப்பயறு தரமற்ற நிலையில் இருந்ததும், வண்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சமைக்கப்பட்ட உணவிலும் வண்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கன்வாடி மையம் முன்பு பொதுமக்கள் திரண்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து குழந்தைகளை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நகராட்சி வாகனத்தில் சில குழந்தைகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் மொத்தம் 28 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மதியம் தயாரிக்கப்பட்ட உணவினையும், பாசிப்பயறையும் தரம் பார்த்தனர். கலவை சாதம், பாசிப்பயறு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆய்வுக்கு பின் தான் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

விசாரணை நடத்த உத்தரவு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதாராமு ஆகியோர் பாா்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். அதன்பின் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், ''அங்கன்வாடி மையத்தில் 22 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கன்வாடி மையத்தில் இருந்து உணவினை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து சிலர் சாப்பிட்டுள்ளனர்.

இதில் 2 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அழகு செல்வம் பார்வையிட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story