வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வசதி
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வசதி
திருப்பூர்,
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை வருகிற 1-ந் தேதி முதல் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை உறுதி செய்யவும், ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ளதா அல்லது ஒரு வாக்காளர் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறியவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.
இந்த பணி வருகிற 1-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண் விவரங்களை தன் விருப்பத்தின் அடிப்படையில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் www.nvsp.in., voters portal என்ற இணையதளம் மூலமாகவும், voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் இணையவழியில் 6B படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்த பணிக்கு வரும்போது தன் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6B-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்து இணைத்துக்கொள்ள முடியும்.
11 ஆவணங்கள்
வாக்காளர்களுக்கு ஆதார் எண் இல்லை என்றால், ஆதார் எண் தெரிவிக்க இயலாத வாக்காளர்கள் படிவம் 6B-ல் தெரிவிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதன் நகலை படிவம் 6B யுடன் அளிக்க வேண்டும். அதன்படி, 1.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, 2.வங்கி, அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், 3.தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை, 4.ஓட்டுனர் உரிமம், 5.நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), 6.தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாள சான்று, 7.இந்திய கடவுசீட்டு, 8.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், 9.மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, 10.நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக அடையாள அட்டை, 11.இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
எனவே வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை அளித்து ஒத்துழைக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.