வ.உ.சி. மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் அபூர்வா ஆய்வு
பாளையங்கோட்டையில் நவீனப்படுத்தப்பட்ட புதிய வ.உ.சி. மைதானத்தை, விளையாட்டு மேம்பாட்டுதுறை ஆணையர் அபூர்வா ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டையில் நவீனப்படுத்தப்பட்ட புதிய வ.உ.சி. மைதானத்தை, விளையாட்டு மேம்பாட்டுதுறை ஆணையர் அபூர்வா ஆய்வு செய்தார்.
ஆய்வு
நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அரசு முதன்மை செயலர், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையர் அபூர்வா நேற்று நெல்லையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் விஷ்ணு, ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியில் நவீனப்படுத்தப்பட்டதை பார்வையிட்டார். மேலும் அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அண்ணா விளையாட்டு அரங்கம் சென்று அங்குள்ள ஆக்கி மைதானம், தடகள போட்டி மைதானம், மற்றும் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் ஆகியவைகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு தேவையாள அடிப்படை வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்தார்.
அனைத்து வகையான விளையாட்டுகள்
பின்னர் அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த ஆண்டு மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு மழையின்போது ஏற்படும் வெள்ளம் மற்றும் மழைநீர் உடனடியாக வடிந்து விடும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானம் விளையாட்டு அரங்கம், சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.
வ.உசி மைதானத்தை பொறுத்தவரை ஒரு தனி விளையாட்டுக்கு மட்டும் ஒதுக்காமல் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் அளவில் இருக்கைகள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்த மைதானத்தில் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சந்திப்பு பஸ்நிலையத்தை பொறுத்த வரை கனிமவளம் அள்ளப்பட்டது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் அது முடிந்த பின்பு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேரன்மாதேவி
தொடர்ந்து சேரன்மாதேவி தாலுகா அலுவலகம், இ-சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் செயல்பாடுகள் குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து திருவித்தான்புள்ளியிலும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட முதுநிலை மேலாளர் வீரபுத்திரன், மாநகராட்சி பொறியாளர் அசோகன், உதவி கலெக்டர் சந்திரசேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.