விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், விசைத்தறி தொழில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 26 மாதங்களுக்கு மேலாக புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் விசைத்தறி தொழிற்சங்கத்தினர் 75 சதவீதம் கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடைபெற்ற கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில், விசைத்தறி உரிமையாளர்கள் நிர்வாகம் மற்றும் விசைத்தறி தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., ஏ.ஐ.சி.டி.யு., ஏ.ஐ.சி.சி.டி.யு. உள்ளிட்ட 3 சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவு ஆண், பெண்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவானது. இந்த ஒப்பந்தமானது 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி நிர்வாகங்கள் சார்பில் கூலி உயர்வு ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திடப்பட்டது. மேலும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில், அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.