விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
போடிப்பட்டி
மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்நடத்தினர்.
கூட்டுப் பட்டா
மின்சாரத்துறை, பத்திரப்பதிவுத்துறை, கூட்டுறவுத்துறை, ஒன்றிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடன் பெறுவதற்கு மற்றும் அரசின் கொள்முதல் திட்டங்களில் நெல், கொப்பரை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு என அனைத்திலும் கூட்டுப் பட்டாவில் உள்ள நிலங்களுக்கு நில உரிமைச் சான்று தேவைப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின் படி கடந்த சில வாரங்களாக நில உரிமைச் சான்று வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்டவற்றுக்கு எதிராக பலத்த கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாக்குவாதம்
தாலுகா அலுவலகத்துக்குள் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருப்பூர் மண்டல மேலாளர் சக்திவேல் மற்றும் தாசில்தார் சபாபதி ஆகியோர் வெளியே வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக விவசாயிகளை வெளியில் காத்திருந்ததால், போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.அதன்பிறகு வெளியே வந்த அதிகாரிகள் தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரிமைச் சான்று வழங்கலாம் என்று கலெக்டர் நேற்றே உத்தரவு பிறப்பித்து விட்டார் என்று கூறுகின்றனர். இந்த தகவலை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவித்திருந்தால் போராட்டம் சில நிமிடங்களில் முடிவுக்கு வந்திருக்கும்.
சில வாரங்களாக உரிமைச் சான்று இல்லாததால் பல விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அறுவடை செய்த நெல்லை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாததால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர். மேலும் பேச்சுவார்தையில் ஈடுபட்ட அதிகாரி மீதே குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.