வலங்கைமான் வட்டார கல்வி அதிகாரி கைது
சிலை திருட்டில் ஈடுபட்ட வலங்கைமான் வட்டார கல்வி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலை திருட்டுக்கு பயன்படுத்திய அவரது ஸ்கூட்டரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரத்தநாடு:
சிலை திருட்டில் ஈடுபட்ட வலங்கைமான் வட்டார கல்வி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலை திருட்டுக்கு பயன்படுத்திய அவரது ஸ்கூட்டரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில் சிலை திருட்டு
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இருந்த கருங்கல்லால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் மூசிகம் சிலை ஆகிய இரு சிலைகளை யாரோ திருடி சென்று விட்டதாக கோவில் செயல் அலுவலர் சக்திவேல் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
வட்டார கல்வி அதிகாரி
விசாரணையில், பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை(வயது 60) என்பவர் சம்பவத்தன்று அதிகாலை சாமி சிலைகளை திருடி ஒரு ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றது தெரிய வந்தது.
செல்லத்துரை, குறிச்சி காசி விஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார கல்வி அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
கைது
இதைத்தொடர்ந்து செல்லத்துரையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குறிச்சியில் உள்ள பள்ளியில் செல்லத்துரை தலைமை ஆசிரியராக பணியாற்றியபோது அவருக்கும், அந்த ஊரை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செல்லத்துரை கோவிலின் சாமி சிலைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
விசாரணை முடிவில் போலீசார், செல்லத்துரையை கைது செய்தனர்.
சாமி சிலைகள் மீட்பு
மேலும் வலங்கைமானில் தனது அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவரது வீட்டில் செல்லத்துரை பதுக்கி வைத்திருந்த சாமி சிலைகளை போலீசார் மீட்டதுடன், சிலைகளை திருட பயன்படுத்திய அவரது ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வலங்கைமான் வட்டார கல்வி அதிகாரி செல்லத்துரையை போலீசார் கும்பகோணம் கூடுதல் முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.