திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்
திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல்ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் உள்ளன. இவர் ரவுடி பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 5-ந் தேதி தனது பிறந்தநாளையொட்டி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மதுபான கூடத்தில் மதுஅருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் திருவள்ளூர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.