கோவில்களில் நடை அடைப்பு
சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்பட்டன. வீடுகளில் மக்கள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.
தேன்கனிக்கோட்டை:
சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்பட்டன. வீடுகளில் மக்கள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.
சூரிய கிரகணம்
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் வேலைகளில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பிறகு கோவில்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பின்னர் நடை திறக்கப்படும்.
அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் நேற்று நடை சாத்தப்பட்டது. மாவட்டத்தில் மாலை 5 மணி அளவில் சூரிய கிரகணம் நடைபெற்றது. அப்போது சுமார் 5.32 மணி அளவில் 3 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபோது சூரியன் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது. இதை தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர். அதன்பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜை அறையில் சாமி தரிசனம் செய்தனர்.
வீடுகளில் முடங்கிய மக்கள்
ஓசூர் பகுதியில், கிரகணத்தின் போது எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை மற்றும் அச்சம் காரணமாக கோவில்கள் நடை சாத்தப்பட்டன. தொடர்ந்்து கிரகண நிகழ்வின் போது மக்கள் வீடுகளில் முடங்கினர். மேலும் வெளியே சென்றவர்கள் மாலை 4 மணிக்கு முன்னதாகவே வீடுகளுக்கு சென்று முடங்கினர். இதனால், ஓசூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இல்லாததாலும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், அடைக்கப்பட்டன.
பின்னர் கிரகணம் நீங்கியவுடன், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றி சாமியை வழிபட்டனர். மேலும் கோவில்களும் சுத்தம் செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, கிரகண நிகழ்வின் போது, உரல் மீது உலக்கையை வைத்தால் எந்த பின்புலமும் இன்றி உலக்கை நேராக நிற்கும் என்று பெரியவர்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமான வீடுகளில் பொதுமக்கள் இதுபோன்று செய்து பார்த்து வியப்படைந்தனர்.