பவானி மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகை பறிப்பு; 2 பேர் கைதுபோலீசாரை தள்ளிவிட்டு ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
பவானி மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்படடனா்.
பவானி மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை தள்ளிவிட்டு ஓடிய மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆயுதங்களுடன்புகுந்த கும்பல்
ஈரோடு பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கீர்த்தன். இவர் பவானி லட்சுமி நகரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். அங்கு 2 பெண்கள், 2 ஆண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென மசாஜ் சென்டருக்குள் புகுந்தது. அவர்கள் கையில் கிரிக்கெட் மட்டை, கத்தி உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். கையில் ஆயுதங்களுடன் நுழைந்த அந்த கும்பல் மசாஜ் சென்டருக்குள் இருந்த பெண்களிடம் பணம், நகையை தரச்சொல்லி கத்திமுனையில் மிரட்டினர். மேலும் அதில் ஒரு பெண் அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக்கொண்டனர்.
போலீசுக்கு தகவல்
இதனிடையே மசாஜ் சென்டரின் உரிமையாளர் கீர்த்தன். மையத்தில் உள்ள தன்னுடைய அறையில் இருந்தவாறு மசாஜ் சென்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை செல்போனில் பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது மர்ம கும்பல் உள்ளே புகுந்து நகை பறிப்பதை பார்த்து திடுக்கிட்ட அவர், உடனே சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சிறிது நேரத்தில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் உள்ளே நுழைந்ததை அறிந்துகொண்ட மர்ம கும்பல் தப்பி வெளியே ஓடி வந்தனர். அப்போது சென்டரின் வாசலில் அவர்களை தடுப்பதற்காக 4 போலீசார் நின்று கொண்டு இருந்தனர்.
போலீசாரை தள்ளிவிட்டனர்
இந்தநிலையில் வாசலில் நின்ற போலீசாரை கீழே தள்ளிவிட்டு ரோட்டை நோக்கி மர்ம கும்பலை சேர்ந்த 6 பேரும் ஓடினர். கீழே விழுந்த போலீசார் சுதாரித்துக்கொண்டு எழுந்து சினிமாவில் வருவதுபோல் ரோட்டில் கொள்ளையர்களை துரத்தினர். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு உதவியாக பிடியுங்கள், பிடியுங்கள் என்று குரல் எழுப்பியபடி துரத்தினர்.
2 பேர் கைது
ஒரு கட்டத்தில் தப்பி ஓடிய 6 பேரில் 2 பேர் போலீசாரின் கைகளில் சிக்கினர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் கவுதம் ஆகியோர் என்பதும், மசாஜ் சென்டருக்குள் புகுந்து அதன் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.