மாண்டஸ் புயல்: சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு தடை
மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வருகிறது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து அரும் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரைக்கு செல்லும் பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மாநகராட்சி பூங்காக்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.