குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடைபயணம்; 18 பேர் கைது


குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடைபயணம்; 18 பேர் கைது
x

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடைபயணம் மேற்கொண்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

குடிநீர் தொட்டி அசுத்தம்

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அசுத்தத்தை கலந்த மர்ம ஆசாமிகளை பிடிக்க வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

18 பேர் கைது

இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், தாங்களே நேரில் சென்று அவர்களை கைது செய்ய நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் புதுக்கோட்டை கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு)-மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் விடுதலை குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் வேங்கைவயலை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் மொத்தம் 6 பெண்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story