பஸ் நிறுத்தத்தில் நிழலக கட்டிடம் கட்டப்படுமா?
திருமுல்லைவாசல் சாந்தாயிஅம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழலக கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சீர்காழி;
திருமுல்லைவாசல் சாந்தாயிஅம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழலக கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பஸ் நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி அருகில் சாந்தாயி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் காந்திநகர், இருதய நகர், பெரியார் நகர், தாழந்தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருமுல்லைவாசல், தொடுவாய், சீர்காழி, எடமணல், கடவாசல், வடகால், சிதம்பரம், பழையாறு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
நிழலக கட்டிடம்
இந்த பஸ் நிறுத்தத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழலக கட்டிடம் வாகனம் மோதி சேதமடைந்ததால் ஊராட்சி சார்பில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு மாற்றாக கடந்த 4 ஆண்டுகளாக பயணிகள் நிழலக கட்டிடம் கட்டப்படாததால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் மரத்தடியிலும், வெட்ட வெளியில் மழை மற்றும் வெயிலில் நின்றவாறு பஸ் ஏற வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் பயணிகள் நிழலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் கட்டித்தர வேண்டும்
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் கூறியதாவது:-
திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தாயி அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் ஏற்கனவே பயணிகள் நிழலக கட்டிடம் இருந்தது. தற்போது பயணிகள் நிழலக கட்டிடம் இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறாா்கள்.
இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் இந்த இடத்தில் நிரந்தர பயணிகள் நிழலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.