பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கருவாடுகளை காய வைக்க வசதியாக பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்;
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கருவாடுகளை காய வைக்க வசதியாக பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழையாறு மீன்பிடிதுறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசைப்படகுகள், பைபர் படகுகள், மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் பல வகையான மீன்கள் உள்ளன. உணவுக்கு பயன்படும் மீன்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவுக்கு பயன்படும் மீன்களில் சில ரகமான மீன்கள் அதிக விலை போகின்றன. சில வகையான மீன்கள் சாதாரண விலைக்கு விற்பனையாகின்றன. சிறு மீன்கள் கோழி தீவனம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கோழித்தீவனம்
இத்தகைய மீன்கள் தனியாக தரம் பிரிக்கப்பட்டு கோழி தீவனம் தயாரிப்பதற்காக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு இந்த வகையான மீன்கள் உலர வைக்கப்பட்டு அரைக்கப்பட்டு கோழித்தீவனமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சாப்பிட பயன்படும் மீன்களில் சில வகையான மீன்கள் கருவாடுகளாக மாற்றப்படுகிறது.பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் அதிக அளவு மீன்கள் பிடிக்கப்பட்டாலும் அதில் ஒரு பகுதி கருவாடுக்காக உலர வைக்கப்பட்டு வருகின்றன.மேலும் மொத்த விற்பனை போக எஞ்சியுள்ள மீன்களும் கருவாடாக உலர வைக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீன் வியாபாரம் எந்த அளவுக்கு சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த அளவு பழையாறு துறைமுகத்தில் கருவாடு வியாபாரமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கருவாடு உலர் தளம்
இதற்காக பிரத்தியேகமாக வெளி மாவட்டங்களில் இருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வது போல் கருவாடுகளையும் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதிக அளவில் கருவாடுகள் பழையாறு துறைமுத்தில் உலர வைக்கப்பட்டு வந்தாலும் திறந்த வெளியிலேயே உலர வைக்கப்பட்டு வருகிறது.பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கருவாடுகளை காய வைக்க இதுவரை கருவாடு உலர்தளம் அமைக்கவில்லை. இதனால் கருவாடுகளை திறந்த வெளியில் மீனவர்கள் உலர வைத்து வருகின்றனர். திடீரென மழை பெய்து விட்டால் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் கருவாடுகள் மழையில் நனைந்து மீனவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் கருவாடு உலர்தளம் அமைத்தால் மீன்களை உலர வைக்கும் போது பாதிப்புகள் இல்லாமல் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
நடவடிக்கை
இதுகுறித்து கருவாடு வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தி கூறியதாவது:-
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் அதிக அளவு கருவாடு உலர வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் திறந்த வெளியிலேயே கருவாடுகள் உலர வைக்கப்பட்டு வருகின்றன. மழை பெய்யும் போது சில நேரங்களில் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தொண்டு நிறுவனம் சார்பில் கருவாடு உலர் தளம் அமைக்கப்பட்டது. அது தற்காலிகமாக அமைக்கப்பட்டதால் அவைகள் வீணாகி அகற்றப்பட்டு விட்டன.எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் வியாபாரத்தையும் கருத்தில் கொண்டு பழையாறு துறைமுக வளாகத்தில் கருவாடு உலர் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.