நகராட்சி கணினி வசூல் மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


நகராட்சி கணினி வசூல் மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி நகராட்சி 4-வது வார்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள கணினி வசூல் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

4-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சியின் வடக்கு பகுதியில் 4-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் 476 வீடுகள் உள்ளன. சந்தைப்பேட்டை சாலை, இப்ராகிம் ரோடு, குப்புசாமி ரோடு உள்ளிட்ட 12 தெருக்கள் அமைந்துள்ளன. இந்த வார்டில் 760 ஆண் வாக்காளர்களும், 815 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,575 வாக்காளர்கள் உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

தர்மபுரி நகரின் முக்கிய வணிக மையமான சந்தைப்பேட்டை இந்த வார்டில் அமைந்துள்ளது. இந்த சந்தைப்பேட்டைக்கு பல்வேறு பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள். இதேபோல் நகர்ப்புற சுகாதார நிலையம், தர்மபுரி நகராட்சியில் 1-வது வார்டு முதல் 10-வது வார்டு வரை உள்ள பகுதிகளுக்கான குடிநீர் வினியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நகராட்சி ஆடு அறுக்கும் தொட்டி, வீடு அற்றோர் தங்கும் இல்லம் ஆகியவை இந்த வார்டு பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

கணினி வசூல் மையம்

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு முதல் 9-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த வசதியாக இந்த வார்டில் கடந்த 2007-ம் ஆண்டு நகராட்சி கணினி வசூல் மையம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மையம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இந்த கணினி வசூல் மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக 4-வது வார்டு பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

இப்ராகிம் தெருவை சேர்ந்த மெக்கானிக் பாபு:-

4-வது வார்டில் சந்தைப்பேட்டை மற்றும் கோட்டை கோவிலுக்கு செல்லும் சாலை அதிகளவில் போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். வாரந்தோறும் ஆட்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் ஆடுகள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் அவற்றின் கழிவுகள் மூலம் சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இதேபோல் தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி முறையாக இல்லாததால் கழிப்பிடங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக சந்தைப்பேட்டை வளாகத்தில் சில இடங்கள் இயற்கை உபாதைக்கு செல்லும் இடமாக மாறிவிட்டதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இங்குள்ள கழிப்பிடங்களுக்கு முறையான தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தெரு விளக்குகள்

குப்புசாமி தெருவை சேர்ந்த மேஸ்திரி சின்னபையன்:-

இந்த வார்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கணினி வசூல் மையம் இதுவரை முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த கணினி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன் மூலம் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இங்கே செலுத்த முடியும். இந்த வார்டில் உள்ள குப்புசாமி தெரு, சதாசிவம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் இல்லை.

இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இந்த பகுதிகளில் இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு இங்கு தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் இந்த தெருவில் அமைந்துள்ள கான்கிரீட் சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் அதை சீரமைக்க வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

கோட்டை பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவி மேகலா:-

தர்மபுரி நகராட்சியில் 10-வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இந்த வார்டில் அமைந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த வார்டு பகுதியில் மக்களுக்கு குடிநீர் போதிய அளவில் கிடைப்பதில்லை. அவ்வப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

எனவே சுழற்சி முறையில் இந்த வார்டு மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டில் ஆடு அறுக்கும் தொட்டி அமைந்துள்ள பகுதியில் உருவாகும் கழிவுகளை அவ்வப்போது முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story