உஷார்... உஷார்... - களவாடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் -பறிகொடுத்துவிட்டு பரிதவிப்பில் உரிமையாளர்கள்


உஷார்... உஷார்... - களவாடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் -பறிகொடுத்துவிட்டு பரிதவிப்பில் உரிமையாளர்கள்
x

ஜல்லிக்கட்டு காளைகள் களவாடப்படுவதால் உஷாராக இருக்க வேண்டிய நிலையில் காளை உரிமையாளர்கள் உள்ளனர்.

மதுரை

அலங்காநல்லூர்,

ஜல்லிக்கட்டு காளைகள் களவாடப்படுவதால் உஷாராக இருக்க வேண்டிய நிலையில் காளை உரிமையாளர்கள் உள்ளனர்.

காளைகளை குறிவைத்து திருட்டு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா, நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாக இருக்கிறது.

அங்கு வாடிவாசலில் தங்களது காளைகளை களம் இறக்கும் நடவடிக்கைகளில் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில், 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடப்பட்டு உள்ளன. முடுவார்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பாலமேடு போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 4-ந்தேதி அதிகாலையில் 3 காளைகள் திருடப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம், 'காளை திருடர்களை' தேடிவருகின்றனர்.

இதேபோல கடந்த 8-ந்தேதி தத்தனேரியில் பொன்னம்பலராஜதுரை என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை திருடப்பட்டு உள்ளது.

காளைகள் களவாடப்படுவது காளை வளர்ப்பவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கண்ணும் கருத்துமாக காளைகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

நினைவை இழந்ததா?

இதுகுறித்து கடந்த 4-ந்தேதி திருட்டுபோன, பாலமேடு மஞ்சமலை சுவாமி கோவிலுக்கு சொந்தமான காளையை பராமரித்து வந்த முடுவார்பட்டி அழகப்பன் கூறியதாவது:-

மஞ்சமலை சுவாமியை வழிபடும் பங்காளிகளாக சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காளைக்கன்று ஒன்றை வாங்கினோம். அந்த கன்றை கண்ணும் கருத்துமாக, எங்கள் வீட்டு பிள்ளையைப் போல எனது பொறுப்பில் வளர்த்து வந்தேன்.

சில வருடங்களாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று காளையர்களிடம் சிக்காமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்பட எக்கச்சக்க பரிசுகளை பெற்று, மஞ்சமலை சுவாமிக்கும், எங்கள் பங்காளிகளுக்கும் அந்த காளை பெருமை சேர்த்தது. செல்லப்பிள்ளையாக காளை வளர்ந்தது. 4-ந்தேதி எங்கள் வீட்டின் முன்பு காளையை கட்டிப்போட்டு இருந்தோம். அதிகாலையில் மர்மநபர்கள் காளையின் கயிற்றை அறுத்து, திருடிச் சென்றுள்ளனர். எங்களைத்தவிர மற்றவர்கள் காளையின் அருகில் கூட செல்ல முடியாது. ஆனால் மர்மநபர்கள், மயக்க மருந்து செலுத்தியோ, அல்லது வேறு வகையிலோ காளையின் நினைவை கலைத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்று இருக்க வேண்டும். இதுபற்றி புகார் அளித்து உள்ளோம். எங்கள் காளை மீண்டும் எங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோகத்தில் மூழ்கிய குடும்பம்

அதே நாளில் திருடப்பட்ட மற்றொரு காளையின் உரிமையாளரான கோடாங்கிபட்டி லட்சுமி கூறியதாவது:-

சிறிய கன்றுக்குட்டி பருவத்தில் இருந்து வளர்த்து வந்தோம். எங்கள் குலதெய்வத்தின் பெயர் முத்தையன் என்பதை காளைக்கு வைத்து, ஆசை ஆசையாக அழைப்போம். முத்தையா... என்ற சத்தத்தை கேட்ட உடன், அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும். எங்கள் குடும்பத்தினர் முத்தையன் மீது உயிருக்கு உயிராக இருந்தோம்.

எங்கள் வீடு சாலையோரமாக உள்ளது. ஏராளமான மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் எங்கள் முத்தையன் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளான். இதுவரை யாரிடமும் பிடிபட்டதில்லை. எங்களைத்தவிர, வெளிநபர்கள் யாரும் நெருங்கக்கூட முடியாது. கடந்த 4-ந்தேதி இரவு 11.30 மணி அளிவில்தான் காளையை கடைசியாக பார்த்துவிட்டு தூங்கினோம். சில மணி நேரம் கழித்து பார்த்தபோது காணவில்லை.3 நாட்களுக்கும் மேலாக காளையை எல்லா பகுதியிலும் தேடினோம். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் குடும்பமே சோகத்தில் உள்ளது. காளையின் நினைப்பாகவே உள்ளது. முத்தையன் மீண்டும் எங்களிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அதுவரை எங்களால் நிம்மதியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story