காணாமல்போன வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தாய் மனு


காணாமல்போன வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா?  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தாய் மனு
x

காணாமல்போன வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று சந்தேகம் உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தாய் மனு கொடுத்தார்.

ஈரோடு

காணாமல்போன வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று சந்தேகம் உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தாய் மனு கொடுத்தார்.

வாலிபர் மாயம்

சென்னிமலை அருகே உள்ள முகாசி பிடாரியூர் குட்டையன்காடு பகுதியை சேர்ந்த சிவகாமி (வயது 47). இவர், நேற்று தனது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:

நான் கூலி தொழிலாளி. எனது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் சேகர் (21) விசைத்தறி தொழிலாளி. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி, எனது மகன் வெள்ளோடு புங்கம்பாடி பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

அடித்து கொலை செய்யப்பட்டாரா ?

இதுகுறித்து நான் எனது மகனின் நண்பர் வீட்டிற்கு சென்று கேட்டேன். அப்போது எனது மகனின் நண்பருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறை எனது மகன் சேகர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ததும், பின்னர் எனது மகனின் மோட்டார் சைக்கிளை மேட்டுக்கடையில் உள்ள நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து பணம் பெற்று இருவரும் குடித்துவிட்டு சுற்றியதாகவும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து என் மகன் காணாமல் போனது குறித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 12-ந்தேதி புகார் அளித்தேன். ஆனால் இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கிடையில் எனது மகனின் நண்பர் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளது. மதுபோதையில் எனது மகனை அவரது நண்பர் அடித்து படுகொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.


Next Story