முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை மீட்க கோரி உறவினர்கள் மறியல்


முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட  தொழிலாளியை மீட்க கோரி உறவினர்கள் மறியல்
x

கூடலூர் அருேக முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை மீட்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

முல்லைப்பெரியாறு

கூடலூர் சுல்லக்கரை ஓடை பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (33). கட்டிட தொழிலாளர்கள். கடந்த 6-ந்தேதி இவர்கள் இருவரும் கூடலூர் காஞ்சிமரத்துறை அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிவா, ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த பரமசிவம் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆற்றில் குதித்து சிவாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாவை தேடினர். பின்னர் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

சாலை மறியல்

இதனைத் தொடர்ந்து போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக அவரை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதை நிறுத்தி சிவாவை தேட வேண்டும் என கோரி, 8-வது வார்டு நகராட்சி உறுப்பினர் சிலம்புராஜன் தலைமையில் அவரது உறவினர்கள் நேற்று கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலை வடக்கு தியேட்டர் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story