தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.
மழைநீர் சேமிப்பு
இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.
கழிவுகள்
அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது.
அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
---
சோழமாதேவி பகுதியில் தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடைந்துள்ளதை படத்தில் காணலாம்.