ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?


ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா?
x

திருத்துறைப்பூண்டி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வளவன்வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வளவன்வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

விவசாயம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை நம்பி மட்டுமே உள்ள பகுதி திருவாரூர் மாவட்டம். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து பருவமழை போதிய அளவு பெய்தால் மட்டுமே இந்த பகுதியில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். திருத்துறைப்பூண்டியில் பயிரிடப்படும் பல லட்சம் எக்டேர் நிலங்களுக்கு எந்த அளவுக்கு பாசன வசதி வேண்டுமோ அந்த அளவுக்கு வடிகால் வசதியும் வேண்டும்.இதற்கு வளவனார் வடிகால் ஆறு முக்கிய பங்காற்றும். கடுமையான மழை வெள்ளத்தின் போது தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகி நாசமாகும் சூழலில் வளவன் ஆற்றின் வழியாக தண்ணீர் தொண்டியக்காடு கடலில் கலக்கும்.

தூர்வார கோரிக்கை

வளவனார் வடிகால் வாய்க்கால் மூலம் திருத்துறைப்பூண்டி நெடும்பலம், கள்ளுகுடி, வேப்பஞ்சேரி, கருவேப்பஞ்சேரி, பாண்டி, குன்னலூர், எக்கல், கடம்பவிலாசம், மேலமருதூர், வடபாதி, தென்பாதி, கட்டிமேடு, ஆதிரங்கம், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராம விவசாயிகள் பயன்பெற்று வருகிறாா்கள். வளவனார் வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி வாய்க்கால் மறையும் அளவுக்கு உள்ளது.எனவே வளவனார் வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த பணிகளை கோடை காலத்தில் செய்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என இப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு பாதிப்பு

இது குறித்து சமூக ஆர்வலர் சிவக்குமார் கூறியதாவது:- வளவனார் வடிகால் வாய்க்கால் திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கடுமையான மழை காலங்கள் வெள்ளம் காலங்களில் தங்கள் வயல்களில் பயிர்கள் தண்ணீரில் அழுகாமல் இருக்க வளவனார் வடிகால் வழியாகத்தான் தண்ணீரை வடிந்து செல்ல வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பயிர்கள் அழுகும் சூழல் ஏற்படும். ் வளவனார் வடிகால் வாய்காலை தூர்வாராதபட்சத்தில் விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்திப்பார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக வளவனார் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும். இவ்வாறு அவா் கூறினாா்.


Next Story