கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படும்


கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படும்
x

திருத்துறைப்பூண்டியில் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் கூறினார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டியில் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் கூறினார்.

நகர்மன்ற கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடந்தது. நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, மேலாளர் சிற்றரசு, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், நகர மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில் கூறியதாவது:- நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் உள்ள கருவேல மரங்கள் முற்றிலுமாக வெட்டி அகற்றப்படும்.மேலும் கூடுதலான சுகாதாரப் பணியாளர்கள் மூலம் நகரத்தில் உள்ள குப்பைகளும் அகற்றும் ் பணிகள் துரிதப்படுத்தப்படும். அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். . மேலும் புதிதாக சாலைகள் அமைப்பதற்கும் குளங்களில் பராமரிப்பு பணிகளுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினாா். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-

பாலம் கட்ட வேண்டும்

உஷா( அ.தி.மு.க.):- எனது வார்டு பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. சாலைகள் புதிதாக அமைக்க வேண்டும். குடிநீர் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எமல்டா(தி.மு.க.):-இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் முள்ளிஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும்.

ராமலோக ஈஸ்வரி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-

எனது பகுதியில் சாலைகளை சரி செய்ய வேண்டும். பாலங்களை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

சாலை வசதி

சுசிலா( காங்கிரஸ்):-எனது வாா்டு பகுதியில் படித்துறைகளை சரி செய்ய வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.

ராஜேந்திரன்( காங்கிரஸ்):-எனது பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வேதை சாலை பைபாஸ் பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

எழிலரசன்(காங்கிரஸ்):- தேரடி அருகில் தெற்கு வீதியிலும் சாலையில் அமைக்க வேண்டும். குப்பைகளை விரைவாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

நிதி ஒதுக்கீடு

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளான சாலை அமைத்தல், குடிதண்ணீர் தேவை, பாலம் கட்டுதல், குளங்கள் சீரமைப்பு, பணிகள் உள்ளிட்டவைகள் அனைத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் உறுப்பினர்கள் கூறிய அனைத்து பணிகளும் நிறைவாக முடித்து தரப்படும் என கூறினார்.


Next Story