சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்
வடிகால்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மந்தமாக நடைபெறுவதால் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவுமோ? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்;
வடிகால்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மந்தமாக நடைபெறுவதால் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவுமோ? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள்
தஞ்சை மாநகரில் உள்ள வீதிகளில் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளும் மிக முக்கியமானவையாகும். பெரியகோவில் தேர் இந்த 4 வீதிகளில் தான் வலம் வரும். இந்த 4 வீதிகளின் இருபுறமும் வடிகால்கள் உள்ளன. ஆனால் இவைகள் மீது வீடுகள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் எழுப்பப்பட்டு உள்ளன.இதனால் இந்த வடிகால்களை முறையாக தூர்வார முடியாத காரணத்தினால் மண், குப்பைகள் தேங்கி இருந்தது. லேசாக மழை பெய்தால் கூட வடிகால்கள் நிரம்பி வீதிகளில் கழிவுநீருடன் மழைநீர் செல்லும் நிலை உள்ளது. எனவே வடிகால்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
வடிகால்கள் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் தாங்களாகவே முன்வந்து இடிக்க வேண்டும் என கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருவதால் வடிகால்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.தஞ்சை தெற்குவீதி, மேலவீதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை துரிதப்படுத்தி, வடிகால்களை புதிதாக கட்டி, கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
மக்கள் கருத்து
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, வடிகால்கள் மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வடிகால்களை கடந்து செல்வதற்காக வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் முன்பு தற்காலிகமாக கம்புகள், பலகைகள் மூலம் நடைபாதை அமைத்துள்ளோம். இதனால் மிகவும் சிரமப்பட்டு தான் இவற்றின் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இப்படி திறந்தவெளியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கழிவுநீர் திறந்தவெளியில் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றி வடிகால்களை புதிதாக கட்ட வேண்டும் என்றனர்.