கம்பைநல்லூரில் சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரம்பி வழியும் கழிவுநீர்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மொரப்பூர்:
கம்பைநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டிகளில் இருந்து கழிவு நீர் நிரம்பி வழிந்து தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய்க்கிருமிகள் பரவுவதை தடுக்க உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சுத்திகரிப்பு தொட்டிகள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர பகுதிகளில் ஒன்றாக கம்பைநல்லூர் அமைந்துள்ளது. வர்த்தக மையமாக விளங்கும் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்காக கம்பைநல்லூருக்கு வந்து செல்கிறார்கள்.
கம்பைநல்லூர் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்களில் செல்லும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கு காமராஜர் நகர், அம்பேத்கர் நகர், பஜார், சனத்குமார் நதிக்கரை ஆகிய இடங்களில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேங்கும் கழிவு நீர்
இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகளில் உறிஞ்சு குழாய்கள் மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கால்வாய்களில் செல்லும் கழிவு நீரை இந்த உறிஞ்சு குழாய்கள் மூலம் முழுமையாக சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு தொட்டிகளில் இருந்து நிரம்பி வழிந்து கால்வாய்களில் தேங்குகிறது.
இதேபோல் சற்று தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு கழிவுநீர் தேங்குவதால் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு அடைந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டிகளை சீரமைக்க வேண்டும். அங்கு கழிவு நீர் தேங்காத வகையில் சுத்திகரிப்பு பணியை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இது குறித்து கம்பைநல்லூர் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
சுற்றுப்புற சூழல் பாதிப்பு
குடும்ப தலைவி அமலா:-
எங்கள் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு துளைகள் சிறியதாக உள்ளன. இதனால் கால்வாயில் வரும் கழிவுநீர் இந்த துளைகள் வழியாக முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேறுவதில்லை. இதனால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து இந்த பகுதியில் தேங்குவதால் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியை முறையாக சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக எடுக்க வேண்டும்.
பரவும் நோய் கிருமிகள்
முன்னாள் ராணுவ வீரர் திருப்பதி:-
கம்பைநல்லூர் காமராஜர் நகர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடுவது வழக்கம். ஆனால் அப்போது குடியிருப்பு பகுதிகளில்கழிவுநீர் தேங்கும் பிரச்சினை பெரிதாக இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்வாயில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் பகுதி மிகவும் சிறிதாக அமைக்கப்பட்டதால் அதற்குள் கழிவு நீர் முழுமையாக செல்ல முடிவதில்லை. இதனால் இந்த தொட்டியில் இருந்து வழிந்து சுற்று வட்டார பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து விட்டது. இந்த கால்வாய் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் வரும் குடிநீரை இந்த பகுதி மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த குடிநீரிலும் கழிவு நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் கிருமிகள் பரவுவதால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகளை முறையாக சீரமைத்து இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு சுத்திகரிக்கப்படும் கழிவு நீர், ஏரிக்கோடி பகுதிக்கு சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.