திருச்சியில் போக்குவரத்தை சீரமைக்க 12 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள்
திருச்சியில் போக்குவரத்தை சீரமைக்க 12 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
திருச்சியில் போக்குவரத்தை சீரமைக்க 12 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
காவல் கண்காணிப்பு கோபுரம்
திருச்சியில் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்துக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகரத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளுமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருவதை பார்க்க முடிகிறது. போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருந்த போதிலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தநிலையில் திருச்சியில் முக்கிய சாலை சந்திப்புகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசார் இயற்கை உபாதைகளுக்கு செல்லவும், மழையின்போது ஒதுங்கி நிற்கவும் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அறைகளுடன் கூடிய போக்குவரத்து கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து கொடுக்க திட்டமிட்டார்.
12 இடங்களில் அமைக்கப்படுகிறது
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த கண்காணிப்பு கோபுரத்தில் கழிப்பறை வசதி மட்டுமின்றி, கேமரா காட்சிகளை பார்க்கும் வகையில் அகண்டதிரையும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக ஒலிபெருக்கி வசதியும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட திருவானைக்காவல், ஒத்தக்கடை, கே.டி.சிக்னல், சஞ்சீவிநகர், புத்தூர் நால்ரோடு, காந்திமார்க்கெட், கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை, ரெயில்வே ஜங்ஷன், விமானநிலைய வயர்லெஸ்சாலை, மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை உள்ளிட்ட 12 இடங்களில் அதிநவீன போக்குவரத்து காவல் கோபுரங்கள் (மாடர்ன் டிராபிக் பூத்) அமைக்கப்படுகிறது.
காந்திமார்க்கெட் பகுதி
முதல் கட்டமாக காந்திமார்க்கெட் சாலை சந்திப்பு பகுதியில் அதிநவீன போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 20 அடி உயரத்தில் இரும்பு தூண்களை கொண்டு கட்டுமானம் அமைத்துள்ளனர். இதில் தரைப்பகுதியில் இருந்து 8 அடி உயரத்தில் கழிப்பறை, அதற்குமேல் 4 அடி உயரத்துக்கு தண்ணீர்தொட்டி, அதற்கு மேல் 8 அடி உயரத்துக்கு உள்ளே இருந்தபடியே சாலையை கண்காணிக்கும் வகையில் 4 புறங்களிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை, அங்கு செல்வதற்கு படிகட்டு ஆகியவைகளுடன் கட்டப்பட உள்ளது.
இந்த நவீன போக்குவரத்து காவல் கோபுரம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருச்சியில் அமைக்கப்படுவதாகவும், 12 சிக்னல்களிலும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை காவல் கோபுரத்தில் உள்ள அறையில் இருந்து அகண்ட திரையில் பார்வையிடும் வகையில் பிரமாண்ட திரை வசதி செய்து தரப்பட உள்ளது. இது தவிர, ரிமோட் மூலம் இயங்கும் வகையிலான சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன.
சூரிய மின்சக்தி
இதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்து கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இதன் மேற்பரப்பில் ஏற்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக காந்திமார்க்கெட்பகுதியில் அமைக்கப்படும் இதன் பணிகளை முடித்து விரைவில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு இதில் உள்ள நிறை, குறைகளை சரி செய்து, மற்ற இடங்களிலும் கட்டுமான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.