பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க திட்டம்


பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க திட்டம்
x

வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் கணக்கில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்


வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் கணக்கில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

தொடர் மழை

வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணை வேகமாக நிரம்பி 71 அடியை எட்டிய நிலையில் முழுகொள்ளளவை தொட்டு உள்ளது. இதன்காரணமாக வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த நீர் வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

சுமார் 1,500 கனஅடி நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி வருகிறது. இந்த நீர் ஓரிரு நாளில் ராமநாதபுரம் வந்துவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணித்து உள்ளனர். இந்தநிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதோடு ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

உபரிநீர்

ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி-3 ல் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் வகையில் வரம் 14-ந் தேதி வரை 6 நாட்களுக்கு ஆயிரத்து 148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. ஏற்கனவே உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் வைகை ஆற்று பகுதி மற்றும் வரத்து கால்வாய் பகுதிகளில் தண்ணீர் சேர்ந்து குழிகள் நிரம்பி உள்ளது.

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் சேதாரமின்றி திருடப்படாமல் பத்திரமாக கொண்டுவந்து சேர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைகை தண்ணீர் நாளை புதன்கிழமை காலைக்குள் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் 7 அடி உயரம் உள்ள பெரிய கண்மாயில் 5 அடி வரை இந்த தண்ணீரை தேக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை

வரும் தண்ணீரின் அளவை கணக்கில் கொண்டு தண்ணீரை தேக்கி வைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வைகை தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கண்மாய் பாசன விவசாயிகள் முதல்போக விவசாய பணிகளை நம்பிக்கையுடன் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் நன்றாக பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் கடந்த ஆண்டைபோல நன்றாக விளையும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story