கடலில் கலந்து வீணாகும் வைகை தண்ணீர்


கடலில் கலந்து வீணாகும் வைகை தண்ணீர்
x

2-வது ஆண்டாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலந்து வைகை தண்ணீர் வீணாகி வருகிறது.தடுப்பு அணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

2-வது ஆண்டாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலந்து வைகை தண்ணீர் வீணாகி வருகிறது.தடுப்பு அணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வறண்ட மாவட்டம் என்று தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் அழைக்கப் பட்டு வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட மழை பெய்வது குறைவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் குடிதண்ணீர் பிரச்சினை என்பது மிக முக்கிய பிரதான பிரச்சினையாக உள்ளது.

இந்த நிலையில் மதுரை வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு வந்துள்ளது. பெரிய கண்மாய் பகுதியும் நீர் நிரம்பி அங்கிருந்து ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நிரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் வைகை அணையில் இருந்து தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் பெரிய கண்மாய் நீர் நிரம்பி காணப்படு வதால் பெரிய கண்மாய் பகுதியில் இருந்து கடந்த 2 நாட்களாக வைகை தண்ணீர் பனைக்குளம் நதிப்பாலம் வழியாக ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியில் கடலில் கலந்து வீணாகி வருகிறது.

மாவட்டத்தில் சாயல்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஏராளமான கண்மாய் மற்றும் ஊருணிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக வைகை தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை வேதனை அடைய செய்து உள்ளது.

கோரிக்கை

பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வரும் வைகை தண்ணீரை கூடுதலாக சேமித்து வைக்கவும் கரையை பலப்படுத்தி பெரிய கண்மாய் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும் மற்றும் ஆற்றுப்பகுதிக்குள் வளர்ந்து நிற்கும் கருவேல செடிகள், நாணல் செடிகளை முழுமையாக அகற்றவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காததால் மாவட்டத்தில் உள்ள ஊருணி மற்றும் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் செல்ல சரியான பாதைகளை தூர்வார நடவடிக்கை எடுக்காததாலும் வைகை தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2-வது ஆண்டாக கடலில் வைகை தண்ணீர் வீணாகி வருகிறது. கடலில் வைகை தண்ணீர் வீணாவதை தடுக்க தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு அணை அமைக்க வேண்டும் என்பதே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story