அமராவதி கிளை வாய்க்காலில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்காத நிலைக்குத் தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை
மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி அருகே அமராவதி கிளை வாய்க்காலில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்காத நிலைக்குத் தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஆர்.டி.ஓ. ஆய்வு மேற்கொண்டார்.
மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி அருகே அமராவதி கிளை வாய்க்காலில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்காத நிலைக்குத் தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஆர்.டி.ஓ. ஆய்வு மேற்கொண்டார்.
கடைமடை
அமராவதி அணையி்ல் இருந்து கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்தநிலையில் துங்காவி அருகே கிளை வாய்க்காலில் பாசன இடையூறுகளால் கடைமடைகளுக்குத் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'அமராவதி பிரதான கால்வாயில் 1984 ம் ஆண்டு கிளை வாய்க்கால் (மைல் எண் 22-6-215) வெட்டப்பட்டது. இந்த வாய்க்காலின் மூலம் 360 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய்த்துறையிடமிருந்து பொதுப்பணித்துறையிடம் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
இதனால் ஒருசிலர் அவரவர் பூமியில் செல்லும் வாய்க்காலில் பைப் மடைகளும், வெட்டு மடைகளும் அமைத்து முறைகேடாக பாசனம் செய்து வருகிறார்கள். இதனால் கடைமடையிலுள்ள சுமார் 80 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் சென்று சேராத நிலை உள்ளது.
ஆர்.டி.ஓ. ஆய்வு
எனவே வாய்க்கால் பகுதியை அளவீடு செய்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்து முழுமையாக கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இது குறித்து மாவட்டகலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதனடிப் படையில் ஆர்.டி.ஓ. தலைமையிலான அதிகாரிகள் துங்காவி மலையாண்டிப்பட்டினம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் ஆய்வு செய்தனர். அப்போது ஒருசில விவசாயிகள் வாய்க்கால் கரையிலுள்ள தென்னை மரங்களுக்கு மரப்பட்டா கேட்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அளவீட்டுப் பணி மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.
எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கடைமடைக்கு தண்ணீர் செல்ல வழி செய்ய வேண்டும்'. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இது குறித்து ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் கூறியதாவது:-
விதி மீறல்கள்
'விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து கிளை வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அனுமதியற்ற மடை உள்ளிட்ட விதி மீறல்கள் இருப்பதாகத் தெரிகிறது. சில விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மரப்பட்டா வழங்க வேண்டும் என்று ஒருதரப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருதரப்பு விவசாயிகளின் கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' இவ்வாறு ஆர்.டி.ஓ. கூறினார்.
இந்த ஆய்வின்போது மடத்துக்குளம் தாசில்தார் சபாபதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.