அம்மாபேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
அம்மாபேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்தது
அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பூதப்பாடி, பூனாட்சி, பட்லூர், வெள்ளித்திருப்பூர், குருவரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெரிஞ்சிப்பேட்டை அருகே உள்ள கோம்பூர் பகுதி கரையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோம்பூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழி
கடந்த 4 நாட்களாக அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றன. மேலும் வெள்ளம் வெளியேறிய பிறகு அதனை சுத்தப்படுத்தி தண்ணீரை சுத்திகரிக்க மீண்டும் சில நாட்கள் ஆகும்.
காவிரியில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேடான பகுதியில் அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் தண்ணீர் வற்றும் வரை குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாற்று வழி ஏற்பாடு செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.