கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
முத்தூர் கீழ்பவானி பாசன கால்வாயில் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
முத்தூர் கீழ்பவானி பாசன கால்வாயில் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல் சாகுபடி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கால்வாய் வழியாக கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் இறுதி வரை விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்படி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் சாகுபடி மற்றும் சாதாரண முறையில் நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கீழ்பவானி பாசன கால்வாய்கள் வழியாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை பயன்படுத்தி கடைமடை பகுதியான முத்தூர், மங்களப்பட்டி பகுதி மற்றும் கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சி கிராம பகுதிகள் வரை நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
நீர்வளத்துறை அதிகாரிகள்
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட நீர்வள ஆதார, கீழ்பவானி பாசன கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசன கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு உரிய தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மற்றும் கால்வாயில் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொண்டு சென்று வேறு பாசனத்திற்கு பயன்படுத்தினாலும் மற்றும் உரிய சம்பா நெல் பயிர் பாசனத்திற்காக திறந்து விடப்படும்தண்ணீரை வேறு விற்பனை உட்பட மற்ற ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் குறித்து பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.