பரமக்குடியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


பரமக்குடியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை கொட்டியது. பரமக்குடியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை கொட்டியது. பரமக்குடியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இடி மின்னலும் ஏற்பட்டது. மழையால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.

பரமக்குடி

பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது. இதனால் மழைநீர் தேங்கி பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

கீழப்பார்த்திபனூர், இடையர்குடியிருப்பு, சூடியூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் தமிம் ராஜா, பரமக்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். தண்ணீரை வடியவைப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். மேலும் மின்வாரிய அதிகாரிகளை அழைத்து அப்பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் மின் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மழைச்சேதம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. முருகேசன் தெரிவித்தார்.

மழை விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

ஆர்.எஸ்.மங்கலம்-106.80, கடலாடி-14.6, வாலிநோக்கம்-29.4, கமுதி-76.2, பள்ளமோர்குளம்-22, முதுகுளத்தூர்-25, பரமக்குடி-57.8, ராமநாதபுரம்-25.2, மண்டபம்-27.7, பாம்பன்-32.4, ராமேசுவரம்-40.2, தங்கச்சிமடம்-25.4, தீர்த்தாண்டதானம்-35, திருவாடானை-29.8, தொண்டி-53.7, வட்டாணம்-38.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 106,8 மி.மீ. மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலையில் வானம் கருமேகம் திரண்டு இருந்தது. நேரம் செல்ல செல்ல ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்தனர். மழையால் குளம், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாய பணிகள் மும்முரமாகி உள்ளன. இளையான்குடியில் பாசன கண்மாய் மற்றும் சமுத்திர ஊருணி நிரம்பியுள்ளது.

இளையான்குடி

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சிவகங்கை-21.4, மானாமதுரை-88, இளையான்குடி-102, திருப்புவனம்-67, தேவகோட்டை-2.4, காரைக்குடி-1, காளையார்கோவில்-6.2, சிங்கம்புணரி-1.20.

மாவட்டத்தில் அதிகபட்சமாக இளையான்குடியில் 102 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.


Next Story