பல மாதங்களாக வீணாக பாயும் குடிநீர்
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே மிஸன் வீதியில் ரோட்டோரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து தினமும் அதிக அளவிலான குடிநீர் வீணாக பாய்ந்து வருகிறது.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே மிஸன் வீதியில் ரோட்டோரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து தினமும் அதிக அளவிலான குடிநீர் வீணாக பாய்ந்து வருகிறது.
வீணாகும் குடிநீர்
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே மிஸன் வீதி உள்ளது. இந்த வீதியின் அருகே ரோட்டோரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குழாயிலிருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் பாய்ந்து வருகிறது. தினமும் தொடர்ச்சியாக குடிநீர் பாய்ந்து கொண்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. இவ்வாறு யாருக்கும் பயனின்றி குடிநீர் வீணடிப்பு ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.
சீரமைக்கப்படுமா?
இவ்வாறு குடிநீர் விரயம் ஏற்படுவது ஒருபுறமிருக்க, இங்கு பெரிய குழியும் இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். எனவே இங்கு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து ரோட்டோரம் உள்ள குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இனியும் காலதாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.