நீரூற்று போல பீய்ச்சியடித்த குடிநீர்
மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் உடைந்து நீரூற்று போல குடிநீர் பீய்ச்சி அடித்தது.
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கிராமப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது. இதனால் குடிநீர் தேடி பலரும் பல கிலோமீட்டர் பயணம் செய்யும் நிலை உள்ளது.
அந்த வகையில் கணியூர்-காரத்தொழுவு சாலையில் உள்ள திருமூர்த்தி கூட்டு குடிநீர்த்திட்ட வால்வு பகுதியில் ஏற்படும் கசிவு நீர் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீராக பயன்பட்டு வருகிறது. இங்கு பல மணி நேரம் காத்திருந்து கசிவு நீரை சேகரித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குழாய் உடைந்து பீய்ச்சி அடித்தது
இந்த நிலையில் நேற்று இந்த பகுதியில் குடிநீர்க்குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நீரூற்று போல குடிநீர் பீய்ச்சியடித்தது. அதையும் விட்டு வைக்காமல் பல பொதுமக்கள் குடங்களில் சேகரித்து சென்றனர். எனவே குடிநீர் வீணாவதைத் தடுக்கவும் அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர்க்குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் என்பது மடத்துக்குளம் கிராம பகுதி பொதுமக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.