ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறி குளம்போல் தேங்கிய தண்ணீர்


ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறி குளம்போல் தேங்கிய தண்ணீர்
x

ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் குளம்போல் தேங்கியது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

குளம்போல் தேங்கியது

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள திடீர் குப்பத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி மற்றும் அடிபம்பு அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிகப்படியான தண்ணீரால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், அடிபம்பின் அடிப்பகுதி வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

நோய்கள் ஏற்பட வாய்ப்பு

மேலும் தண்ணீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாதநிலையில், தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று திருமானூர் ஊராட்சி தலைவர் உத்திராபதி அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்வையிட்டு, தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றுவதற்கான ஏற்பாடு செய்வதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி மற்றும் நோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story