ரூ.15¼ கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி
ரூ.15¼ கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி
ஊத்துக்குளி
ஊத்துக்குளி பேரூராட்சி பகுதிகளில் ரூ.15 கோடியே 28 லட்சத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
குடிநீர் ேமம்பாட்டு பணி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் ரூ.15.28 கோடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி அனைவரையும் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, பேரூர் செயலாளர் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்கு தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு விஸ்தரிப்பு செய்யப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தங்கு தடை இன்றி ஒரே மாதிரியாக கிடைக்க வழிவகை செய்யப்படும். இதற்காக ஊத்துக்குளி பேரூராட்சி பகுதி முழுவதும் டிஜிட்டல் சர்வே முறையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து ஊத்துக்குளி பேரூராட்சி பகுதி முழுவதும் இத்திட்டம் விரைவாக பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடைமுறைப்படுத்துவது பற்றி அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வீட்டுமனை பட்டா
பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு வேளாண் இடுபொருட்களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.