ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

நீர்வரத்து குறைந்தது

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது குறைந்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

பரிசல் இயக்க தடை

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் நேற்று சில பரிசல் ஓட்டிகள் தடையை மீறி காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்கினர். இதில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணியாமல் மெயின் அருவி வரை பரிசலில் சென்று வந்தனர். மேலும் அவர்கள் ஆபத்தை உணராமல் அருவி பகுதியில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.


Next Story