ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது. இதனால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.