ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக சரிவு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக சரிவு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:30 AM IST (Updated: 23 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

வெள்ளப்பெருக்கு

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

மேலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நீர்வரத்து குறைந்தது

இந்த நிலையில் கர்நாடகா, கேரளாவில் மழை பெய்வது குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் தொங்கு பாலத்திற்கு கீழே தண்ணீர் செல்கிறது.

போலீசார் அறிவுறுத்தல்

இருப்பினும் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நடைபாதை உள்ளிட்ட பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மரங்கள், செடிகள் ஆங்காங்கே கிடக்கின்றன. காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை அளவீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story