மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 26-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்,
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18 ஆயரம் கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 26-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது.