தொடர் மழையால் நிரம்பிய படேதாள ஏரி 11 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை


தொடர் மழையால் நிரம்பிய படேதாள ஏரி  11 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை
x

கிருஷ்ணகிரி அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையால் நிரம்பிய படேதாள ஏரி மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 11 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

படேதாள ஏரி

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயப்பள்ளி ஊராட்சியில் பூசாரிப்பட்டி கிராமத்தில் 260 ஏக்கர் பரப்பளவில் படேதாள ஏரி உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக மார்க்கண்டேயன் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக படேதாள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை துணை செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் நீர்வரத்து மற்றும் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ரூ.1 லட்சம் நிதி

கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பென்னம்பள்ளி, ஒரப்பம், ஜகுந்தம், சந்தூர், ஆகிய 20 கிராமங்களில் உள்ள 11 ஏரிகளுக்கு 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முன்னதாக படேதாள ஏரியில் இருந்து செல்லும் 15 கிலோமீட்டர் பாசன கால்வாயில் ஏற்பட்டு உள்ள முட்புதர்கள், அடைப்புகளை அகற்றும் பணியை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த பணிக்காக மதியழகன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார். ஓரிரு நாட்களில் படேதாள ஏரியில் இருந்து பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கபட உள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, அறிஞர், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நாகராஜ், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட கவுன்சிலர் சங்கர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story